search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக கோவையில் 400 சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு

    • கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து 10 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நகரில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் கடந்த 2 தினங்களாக கோவையில் முகாமிட்டு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.தாமரை கண்ணன் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

    தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும், கோவை மாவட்ட கலெக்டர், ஐ.ஜி., கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

    கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார், தமிழ்நாடு கமாண்டே படை போலீசார், 4 அதிவிரைவுப்படை கம்பெனிகள், சிறப்பு காவல்படை, ஊர்காவல் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசர் ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    நேற்று 2-வது நாளாக கோவை மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. மாநகர் புறநகரில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் தற்காலிகமாக 56 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோவை போலீசார் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×