search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் 4 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது
    X

    பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் 4 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.
    • பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவில் உள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர், செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.

    ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரை தினமும் 2.50 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் 3-வது வாரம் வரை கோடை மழை பெய்ததாலும், ஜூன் இறுதியில் தென்மேற்கு மழை ஆரம்பமானதாலும் 1½ மாதம் இளநீர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது.

    விற்பனையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் இந்த மழை காரணமாக தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    இப்போதைய சூழ்நிலையில் தேங்காய் விலை சரிவின் காரணமாக விவசாயிகள் இளநீராக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்க தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.

    ஆனால் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள்அதிகரித்ததால், சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.27 ஆக சரிந்துள்ளது.

    தற்போது மழை குறைவால் அறுவடை மேலும் அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கியால் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் வரையிலான இளநீர் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக பொள்ளாச்சிக்கு வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதல் செய்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, மகராஷ்டிரா, அரியானா, உத்தரபிரதேசம், சண்டிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது.

    பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உற்பத்தியாகும் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீரின் வலை தற்போது பண்ணை விலையாக ரூ.27 எனவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.9500 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லாததால் இளநீர் அறுவடை அதிகரித்துள்ளதுடன், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

    சண்டிகார், ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எப்போதும் இல்லாத அளவில் நாள் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×