search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு

    • மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம்.
    • ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரும் 10 ரூபாய் நாணயங்களுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேச்சைகள் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

    மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45), அவர்களது ஒரே மகள் சத்யா (24) ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

    இது குறித்து மாரியப்பன் கூறும் போது,

    நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பி.ஏ.பி. எட். முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக முடிவு செய்துள்ளோம்.

    ஏற்கனவே இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கிறாரோ அதில் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம் என்றார்.

    இதேப்போல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் 10 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

    அவர் கூறும் போது, நான் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

    அறிவிப்பு ஒன்று நடைமுறை ஒன்றாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன். நான் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எனக்கு 3-வது தேர்தலாகும் என்றார்.

    Next Story
    ×