search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லை தொடர்ந்து கிருஷ்ணகிரி...சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு
    X

    நாமக்கல்லை தொடர்ந்து கிருஷ்ணகிரி...சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு

    • மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் மற்றும் சிக்கன் ரைஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த 150 தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். அனைவரும் சாப்பிட்ட நிலையில் பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி இருந்துள்ளது.

    இதில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு 26 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இரவு சாப்பிட்ட சிக்கன் ரைஸ் அதில் இருந்த சிக்கன் காலாவதியானதா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் அதன் தொடர் சம்பவமாக சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் உணவகங்கள் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்த நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். ஆனாலும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Next Story
    ×