search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டி மலர் கண்காட்சி
    X
    ஊட்டி மலர் கண்காட்சி

    ஊட்டி மலர் கண்காட்சியை 1.13 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

    20-ந் தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை காண தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஊட்டி:

    இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது.

    முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி கடந்த 20-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா பயணிகள் கண்டு கழிப்பதற்கு வசதியாக பல வண்ண மலர்களை கொண்டு வேளாண்மை பல்கலைக்கழக மாதிரி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 வாசகம், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் பொம்மைகளும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 பழங்குடியினர்களின் உருவ அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    20-ந் தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்த கண்காட்சியை காண தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கண்காட்சி தொடங்கிய நாளில் இருந்தே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 13 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

    இறுதி நாளான நேற்று மலர் கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறந்த பூங்காவாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி தேர்வு செய்யப்பட்டு கவர்னர் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இதனை ராணுவ கல்லூரி அதிகாரி அனுராக் அத்வால் பெற்று கொண்டார். சிறந்த மலருக்கான முதல்-அமைச்சரின் சுழல்கோப்பை ஊட்டி தலையாட்டி மந்துவை சேர்ந்த ஜான்சி கிசோருக்கு வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஊட்டி நகராட்சி ஆணையர் காந்திராஜா, தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஷிபிலா மேரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×