search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச பெருவிழா கொடியேற்றம்
    X
    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச பெருவிழா கொடியேற்றம்

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் பட்டணபிரவேச நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் பட்டண பிரவேச நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் வேத சிவாகம பாடசாலை நிர்வாக செயலர் குரு.சம்பத்குமார், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் மணி, கல்லூரி முதல்வர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வைகாசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான 18ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும் என்று ஆதீனப் பொதுமேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×