search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபான அலமாரிகளில் செங்கல் வீசப்பட்டிருப்பதை காணலாம்.
    X
    மதுபான அலமாரிகளில் செங்கல் வீசப்பட்டிருப்பதை காணலாம்.

    சிவகாசியில் மதுபான கூடம் சூறை - 50 பேர் மீது வழக்கு

    சிவகாசியில் தனியார் மதுபானக்கூடத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக கிராம மக்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் செவல்பட்டி ஊராட்சி, அன்னபூரணியாபுரம் கிராமத்தில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் மனமகிழ் மன்றம் திறக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அன்னபூரணியாபுரத்தில் மதுபானக்கூடம் திறக்கப்பட்டது.

    இதனை கண்டித்து மதுபானக்கூடம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களாக போராட்டம் நடைபெற்ற போதும் மதுபானக்கூடம் மூடப்படாதது கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    மேலும் மாவட்ட குறைதீர்க்கும் நாள் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை மதுபானக்கூடத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மதுபாட்டில்கள் வைத்திருந்த அலமாரிகள் மீது செங்கல்களை வீசினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், தாசில்தார் தன்ராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் மதுபானக்கூடத்தை சூறையாடிய பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கையில் மண்எண்ணை கேன் மற்றும் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். கடையை மூடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மதுபானக்கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் தனியார் மதுபானக்கூடத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் விசாரணை நடத்தி கிராம மக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். 
    Next Story
    ×