என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்
    X
    புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

    புதுச்சேரியில் சத்துணவுக்கு பதிலாக மாணவர்களுக்கு அரிசி, பணம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு

    புதுச்சேரியில் சத்துணவுக்கு பதிலாக மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக உயர்த்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. விழாவிற்கு ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மட்டும் இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டு வரப்படும்.

    புதுவை மாநிலத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் புதுவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது பள்ளிகள் நடத்தப்படாத காலத்தில் மதிய உணவு வழங்காததற்கு பதிலாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவருக்கு தலா ரூ.250, 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தலா ரூ.330-ம், தலா 4 கிலோ அரிசியும் வழங்கப்படும்.

    கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில் தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. நாம் தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றி வருகிறோம். எனவே இந்த நிகழ்ச்சி வாயிலாக நமது மாணவர்களும் பயனடைவார்கள்.

    எனவே புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தார் தமிழக அரசு ஒளிபரப்பும் கல்வி நிகழ்ச்சிகளை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும். இதேபோல் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பாகவும் காணொலி வாயிலாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதையும் கேபிள் டி.வி.க்கள் ஒளிபரப்ப வேண்டும். இதுகுறித்து புதுவை, காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கேபிள் டி.வி. நிறுவனங்களுக்கு அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    2020-2021-ம் கல்வி ஆண்டில் நீட் அல்லாத பொறியியல், பாலிடெக்னிக், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள், இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நாளை (திங்கட் கிழமை) முதல் ஆன்லைன் முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2016-17-ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 3,858 இடங்களே இருந்தன. தற்போது 6,620 இடங்களாக இது உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் பயிற்றுனர்கள் உதவுவர். விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கல்வித்துறை செயலாளர் அன்பரசு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×