search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் - நாராயணசாமி
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் - நாராயணசாமி

    மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்தவுடன் நேரு கையில் நாடு இருந்தால்தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை ஒப்படைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு நேரு முக்கியத்துவம் அளித்தார்.

    பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அணைகள், மின்நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகங்களும், பத்திரிகைகளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பலவிதமான செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை. யாரும் முன்வரவில்லை. பலமான எதிரணி என்பதால் வெற்றி அவர்களுக்குத்தான் என கூறினர்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தேர்தலில் நிறுத்தினோம். அவரும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதற்காக வேறு ஒரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சித்தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்து வேட்பாளராகினார்.

    காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு, பகலாக பாடுபட்டீர்கள். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தீர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார் என கூறி வந்தேன். ஆனால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி புதுவையில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் கொடுத்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றிக்கு 6 நாள் போராட்டமும், போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம்தான்.

    வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினருக்கும் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீதமுள்ள காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதோடு தொண்டர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். இதை நன்றிக் கடனாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.



    மோடி 2-வது முறை பிரதமராக வெற்றி பெற்றவுடன் பாகுபாடின்றி அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப்பெறவுள்ளோம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் அமைச்சரவை பங்கேற்கும்.

    புதுவை, காரைக்கால் பகுதியில் எரிபொருள் எடுக்க ஆய்வு மையம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதுவை அரசு எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.

    மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் நான் உறுதியளித்துள்ளேன். புதுவைக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×