search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு? - எனக்கு கோப்புகள் வரவில்லை என்கிறார் கிரண் பேடி
    X

    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு? - எனக்கு கோப்புகள் வரவில்லை என்கிறார் கிரண் பேடி

    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு ஒரு உத்தரவையும் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் அனைத்து செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி செயல்படுங்கள் என்றும், அவ்வாறு செயல்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கவர்னருக்கு எந்தவித கோப்பும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண் பேடி விதிகள் ஏதும் மாறாத நிலையில் தனக்கு கோப்புகள் ஏதும் வரவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர் கிரண் பேடி தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாகி என்ற கடமையில் பொதுமக்களுக்கு சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு எந்த கோப்பையும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பவில்லை.

    புதுவை யூனியன் பிரதேச சட்டம், அலுவல் விதிகள், நிதி சட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக எந்த திருத்தமும் செய்யப்படாமல் அப்படியேதான் உள்ளது.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×