search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுல்தான்பேட்டை, பல்லடத்தில் 8-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்
    X

    சுல்தான்பேட்டை, பல்லடத்தில் 8-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.
    பல்லடம்:

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    7-வது நாளான நேற்று முதல் விவசாயிகள் சுல்தான்பேட்டை உள்பட அனைத்து காத்திருப்பு போராட்ட மையங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி தஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு முன்னிலையில் காங்கயம் எம்.எல்.ஏ., தனியரசு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கோவை சுல்தான்பேட்டையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அய்யாகண்ணு, தனியரசு எம்.எல்.ஏ., ஆகியார் மாட்டு வண்டியில் வந்தபோது எடுத்த படம்.

    அப்போது தனியரசு எம்.எல்.ஏ., கூறும்போது, காத்திருப்பு தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சென்னையில் மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் அறவழி போராட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பங்களிப்பு இருக்கும் என்றார்.

    கஜா புயலில் எத்தனை லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இன்னும் அங்கு சரி செய்ய முடியவில்லை. இதேபோல் நாளை வேறு ஒரு புயல் வந்தால் இப்போது போடப்படும் உயர் மின் கோபுரங்கள் சாயாதா? இப்படி வருடம் ஒரு புயல் வரும் மின்கம்பங்கள் சாயும் இதற்கு கோடிகளில் செலவு ஆகும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வதே சிறந்த வழி என்றார்.

    முன்னதாக பிடுங்கப்பட்ட ஒரு தென்னை மரத்தை போட்டு பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

    போராட்ட பந்தலின் முன்பு காய்கறிகளை கட்டி தொங்க விட்டு இருந்தனர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தின் 7-வது நாளான நேற்று உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர். 8-வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது. இதில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது.
    Next Story
    ×