search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
    X

    வானூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

    வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). இவர் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்த சவீதா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    வெங்கடேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அதனை மறைத்து, சவீதாவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த வெங்கடேசின் முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வெங்கடேஷ் தனது 2-வது மனைவி சவீதாவுடன் பூத்துறை காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    வெங்கடேஷ் தனது மனைவி சவீதாவிடம் உன் வீட்டில் இருந்து எனக்கு வரதட்சணையாக பணம், நகை வாங்கிகொடு. இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என கூறிவந்தார். இதற்கு சவீதா எங்கள் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கிதர முடியாது என்றார். இதனால் கணவன்-மனை விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமியார் வீடான புதுவை கூடப்பாக்கத்துக்கு சென்றார். அங்கு வைத்து மாமியார் செல்லம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூத்துறைக்கு வந்தார்.

    அப்போது கணவன்- மனைவிக் கிடையே வரதட்சணை பணம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேஷ் ஆத்திரமடைந்து சவீதாவை கட்டையால் தாக்கினார். பின்னர் சிலிண்டர் பைப்பை எடுத்து சவீதாவின் கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி சவீதா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தடயங்களை மறைப்பதற்காக வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறைகளை வெங்கடேஷ் சுத்தப்படுத்தினார். சவீதா அணிந்திருந்த புடவையை அப்புறப்படுத்தி வேறு புடவையை சவீதாவுக்கு கட்டினார்.

    சவீதாவின் தாய் செல்லம்மாளுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார். என கூறி போனை துண்டித்தார். பின்னர் வீட்டில் இருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் கேட்டு செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு பூத்துறைக்கு வந்தனர். அங்கு சவீதா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சவீதாவின் உடலை பார்வையிட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சவீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து சவீதாவின் தாய் செல்லம்மாள் வானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசை தேடிவருகின்றனர்.


    இந்த நிலையில் இன்று காலை செல்லம்மாள் தனது உறவினர்களுடன் வானூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். சவீதாவை கொலை செய்த வெங்கடேசை உடனே கைது செய்யக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் எழிலரசி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×