search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகஸ்தியர் அருவிக்கு செல்ல 5 நாட்களுக்கு தடை - பக்தர்கள் அதிருப்தி
    X

    அகஸ்தியர் அருவிக்கு செல்ல 5 நாட்களுக்கு தடை - பக்தர்கள் அதிருப்தி

    அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். #agasthiyarfalls
    சிங்கை:

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கடந்த 2-ந்தேதி கால் நாட்டுதலுடன் விழா தொடங்கி, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோவில் அருகே குடில் அமைத்து, சமையல் செய்து தங்கியிருந்து வழிபடுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் கோவில் அருகே தங்குவதற்கு குடில் அமைக்கும் பணியில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வனப்பகுதியில் வனத்துறைக்கு இடையூறு இல்லாத வகையில், சமையல் செய்து சாப்பிடுவதற்கு கியாஸ் சிலிண்டருடன் வந்து தங்குகின்றனர்.

    பக்தர்கள் தங்கும் இடத்தில் தற்காலிக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. காணிகுடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்காக சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் ஏதும் பக்தர்கள் கொண்டு செல்லாதபடி, வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்யப்படுகிறது. முறையான காரணங்களுக்காக வனத்துறை சோதனை செய்து வரும் வேளையில் சில சமயங்களில் பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்விதமாக வனத்துறையினர் நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    ஏற்கனவே கடந்த ஆண்டு தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் காரையார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்கள் அனைத்தும் அம்பை அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு சிறப்பு பஸ்கள் மூலமாக கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காரையாறு காணிக்குடியிருப்புக்கு செல்ல அனுமதியில்லை.

    கடந்த ஆன்டினை போல‌ காரையாறு காணிக்குடியிருப்புக்கு செல்லும் அரசு பஸ்கள் அகஸ்தியர்பட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளது. தனியார் வாகனங்கள் எதுவும் பாபநாசம் சோதனை சாவடிக்கு மேலே செல்ல அனுமதியில்லாததால் அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையம் அருகே போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காரையார் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிக பஸ் நிலையத்தின் கீழ்புறம் உள்ள மைதானத்தில் நிறுத்த அறிவுறுத்தி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பாபநாசம் கோவிலை அடுத்து மேலே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் இன்று அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா வந்த‌ பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். ஏற்கனவே தலையணையில் குளிக்க தடை உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாபநாசம் கோவில் பகுதிவரை மட்டுமே சென்று திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.  #agasthiyarfalls

    Next Story
    ×