என் மலர்
செய்திகள்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு உள்ளது. கண் மருத்துவர் ஸ்டெல்லா மேரி பணியில் இருந்தார். இங்குள்ள அறுவைசிகிச்சை அரங்கில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. உடனே டாக்டர் ஸ்டெல்லாமேரி மற்றும் அப்பகுதியில் நின்றவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறை கண்ணாடியை உடைத்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும் அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
இதுபற்றி திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீ விபத்து குறித்து அங்கு நின்றவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.






