search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரிபாக்கி வைத்திருப்போர் பட்டியலை புகைப்படத்துடன் வெளியிட புதுவை கவர்னர் முடிவு
    X

    வரிபாக்கி வைத்திருப்போர் பட்டியலை புகைப்படத்துடன் வெளியிட புதுவை கவர்னர் முடிவு

    புதுவையில் நீண்ட காலம் வரிபாக்கி வைத்திருப்போர் பட்டியலை புகைப்படத்துடன் ஊடகங்களிலும், துறைகளின் இணையதளங்களிலும் வெளியிட கவர்னர் கிரண்பேடி முடிவு செய்துள்ளார். #GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

    நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசு துறைகளில் நீண்ட காலம் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. நிலுவை வரி பாக்கிகளை வசூலிக்க கவர்னர் கிரண்பேடி அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் முதல் கட்டமாக மின்துறையில் கட்டண பாக்கி வைத்திருப்போர் பட்டியலை கவர்னர் கிரண்பேடி பத்திரிகைகளில் வெளியிட செய்தார். இதையடுத்து கட்டண பாக்கி வைத்துள்ளோர் போட்டி போட்டு கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    மின்துறையின் அதிரடி நடவடிக்கையால் கடந்த 22-ந்தேதி முதல் நாள்தோறும் கட்டணபாக்கி அதிக அளவில் வசூலாகி வருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மின்துறைக்கு ரூ.51 கோடியே 36 லட்சம் கட்டண பாக்கி வசூலாகி உள்ளது.

    இதையடுத்து நிலுவைவரி பாக்கிகளை வசூலிப்பது தொடர்பான அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் ராஜ்நிவாசில் நடந்தது. கூட்டத்தில் மின்வரி, கலால்வரி, வணிகவரி, சொத்துவரி, தொழில்வரி, உள்ளிட்ட வரிகளை வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்ததும் வரிபாக்கி உள்ளவர்களின் சொத்துகளை மின்னனு மூலம் அனைத்து துறைகளும் ஏலம் விட வேண்டும். சட்ட பூர்வமான பரிசீலனைக்கு பிறகு அரசு இதனை செய்ய வேண்டும். வரி கட்டாமல் உள்ளவர்களின் நிலத்தில் ஏலம்விடப்பட போவது குறித்து, அவரது பெயருடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.



    நீண்ட காலம் வரி கட்டாதவர்களின் பெயர்களை ஊடகங்களிலும், துறைகளின் இணையதளங்களிலும் வெளியிட வேண்டும். இணையதளங்களில் வெளியிடும் போது வரி கட்டாதவர்களின் புகைப்படத்தையும் வெளியிட வேண்டும். வணிகவரித்துறை ஆணையர், ஒவ்வொரு மாதமும் சட்டத்துறை செயலரை சந்தித்து, அரசு வழக்கறிஞர் மூலமாக கோர்ட்டில் வழக்குகளை முடிப்பது குறித்து கலந்துரையாட வேண்டும். நிதித்துறை செயலர் 15 நாட்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு கூட்டம் நடத்தி, வரிவசூல் தொடர்பாக நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

    வரிவசூல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அடுத்த மாதம் 26-ந்தேதி ராஜ்நிவாசில் நடக்க உள்ளது. இதில் அதிகாரிகள் வரிவசூல் தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   #GovernorKiranBedi

    Next Story
    ×