search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் பதவியை தொடர விரும்பும் கிரண்பேடி
    X

    புதுவை கவர்னர் பதவியை தொடர விரும்பும் கிரண்பேடி

    கிரண்பேடி வேறு மாநிலத்திற்கு செல்வதை விட புதுவையிலேயே கவர்னராக தொடருவதையே விரும்புகிறார் என்று தெரிகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற அதே நேரத்தில் புதுவை கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.

    அவர் வந்ததில் இருந்தே அமைச்சரவைக்கும் அவருக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. தற்போது அமைச்சரவை - கவர்னர் மோதல் சற்று தணிந்துள்ளது.

    கிரண்பேடி கவர்னராக புதுவைக்கு வந்தபோது நான் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் இருப்பேன். அதன்பிறகு வேறு பணிகளுக்காக சென்றுவிடுவேன் என்று கூறியிருந்தார்.

    அவர் கவர்னராக வந்து இன்னும் 2 மாதத்தில் 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. எனவே அவர் இங்கிருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த அவர் நான் புதுவையில் தொடர விரும்புகிறேன் என்று கூறினார்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசு புதிய கவர்னரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களையும் ஒரே கவர்னர் கவனித்து வருகிறார். எனவே ஆந்திர மாநிலத்திற்கென தனியாக கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து புதிய கவர்னர் நியமிக்கப்பட இருக்கிறார்.

    இந்த பதவியில் புதுவை கவர்னர் கிரண்பேடி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆந்திர மாநில பா.ஜனதா தலைவர் டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து ஆந்திராவுக்கு கிரண்பேடியை கவர்னராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த செய்தி ஆந்திர பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்தது. புதுவையிலும் செய்திகள் வந்தன.

    எனவே கவர்னர் கிரண்பேடி ஆந்திராவுக்கு விரைவில் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி இதை மறுத்துள்ளார்.

    நான் புதுவையை விட்டு செல்லவில்லை. என்னைப் பற்றி வரும் தகவல் எல்லாம் சரியானது அல்ல என்று கூறியிருக்கிறார்.

    எனவே கிரண்பேடி வேறு மாநிலத்திற்கு செல்வதை விட புதுவையிலேயே கவர்னராக தொடருவதையே விரும்புகிறார் என்று தெரிகிறது.

    கிரண்பேடி மாற்றலாகி சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று புதுவை காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர். தற்போது ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் இடையே அமைதி நிலவி வந்தாலும், இந்த அமைதி தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் மோதல் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே தான் கிரண்பேடிக்கு பதிலாக வேறு ஒருவர் கவர்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரசார் நினைத்தனர். ஆனால் கிரண்பேடி இங்கிருந்து வெளியே செல்ல விரும்பாததால் காங்கிரசார் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள்.
    Next Story
    ×