என் மலர்
செய்திகள்

காட்பாடி அருகே டிரம்ஸ் கச்சேரி கும்பல் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி: 18 பேர் படுகாயம்
வேலூர்:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ரெட்டியூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர், திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் டிரம்ஸ் குழுவில் உள்ளார்.
ராணிப்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள ஒட்டனேரி கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிக்காக தனது டிரம்ஸ் குழுவுடன் சதீஷ் சென்றிருந்தார்.
திருவிழாவை முடித்துக் கொண்டு இன்று காலையில் டிரம்ஸ் குழுவினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடிக்கு வேனில் திரும்பினர். வேனை, ஆலங்காயம் பெருகூரை சேர்ந்த நாகராஜ் (34) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். திருவலம் அருகே பொன்னை ரோட்டில் உள்ள குகையநல்லூரில் வேன் சென்றது.
அப்போது டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த அனைவரும் இடி பாடுகளில் சிக்கி அபயக் குரல் எழுப்பினர். சதீஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் நாகராஜ் உள்பட கச்சேரி குழுவினர் 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும், திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வந்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் பலியான சதீஷின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






