search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி
    X

    கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி

    கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. படகுகள் மூலம் கண்காணிப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கிழக்கு கடற்கரையான கூவத்தூரில் 2 கி.மீ. தொலைவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஓட்டலுக்கு செல்லும் ஒரு பகுதி மட்டும் நிலப்பரப்பில் உள்ளது. ஓட்டலைச் சுற்றிலும் 3 புறமும் நீர் சூழ்ந்து குட்டித்தீவு போல் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இங்கு தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 5 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    எம்.எல்.ஏ.க்களை இங்கு அடைத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காஞ்சீபுரம் தாசில்தார் ராமச்சந்திரன், கூடுதல் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். எம்.எல்.ஏ.க்களிடம் எழுத்து மூலமாகவும், பதில் பெற்றுக்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த சொகுசு ஓட்டலுக்குள் அத்து மீறி யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி அ.தி.மு.க. தொண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் ஓட்டலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் நின்று உள்ளே செல்லும் வாகனங்களையும் மற்றவர்களையும் கண்காணிக்கிறார்கள். பத்திரிகையாளர்களையும் உள்ளே விட மறுத்துவிட்டார்கள்.

    இதற்கிடையே கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க் களை சந்திக்க அவர்களது உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை அ.தி.மு.க. பாதுகாப்பு தொண்டர்கள் எம்.எல்.ஏ.க் களுடன் செல்போனில் பேச வைத்து உறுதி செய்து கொண்ட பின்பு அனுமதிக்கிறார்கள்.

    அவர்கள் எம்.எல்.ஏ.க் களுக்கு தேவையான மாற்று உடைகளை வழங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க் களை வேறு யாரும் அணுகிவிடாதபடி இருக்கவும் மற்றவர்கள் படகுகளில் ஊடுருவாமல் தடுக்க படகுகள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    பகல் நேரத்தில் எம்.எல். ஏ.க்களில் சிலர் படகுகளில் உல்லாச சவாரி செய்கிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதி அருகே 1 கி.மீ. தொலைவில் 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சி செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக கூடி இருக்கிறார்கள். வெளி மாநில செய்தியாளர்களும் வந்துள்ளனர்.

    இரவு பகலாக சிலர் அந்த இடத்திலேயே முகாமிட்டு உள்ளனர். அந்தப் பகுதியில் ஓட்டல்களோ, டீக்கடைகளோ எதுவும் இல்லாததால் கார்களில் சென்று உணவு வாங்கி வந்து சாப்பிடுகிறார்கள். இரவில் ஷிப்ட் முறையில் தூங்கி எழுகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு செல்போன் சார்ஜ் மற்றும் தூங்குவதற்கு கட்டில் போன்ற சிறிய உதவிகள் செய்து கொடுக்கிறார்கள்.

    Next Story
    ×