search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் மாயம்: போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்
    X

    கோவை மாவட்டத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் மாயம்: போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்

    கோவை மாவட்டத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் மாயமான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
    கோவை:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்குமண்டலமான கோவை மாவட்டத்தில் 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை தவிர மற்ற 8 எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி விட்டதாக தொகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோதும் செல்போன் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

    தங்களின் அடிப்படைத்தேவைகள் மற்றும் மக்கள் பணியாற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாயமானதாக அ.தி.மு.க. நிர்வாகி சீனிவாசன் கோவை மாநகர கமி‌ஷனரிடம் புகார் அளித்தார்.

    அதில் கடந்த சில நாட்களாக 8 எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் பூட்டிக்கிடக்கிறது. மக்கள் அவர்களை சந்திக்க முடியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. ஓட்டுப்போட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    மாயமான எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன? அவர்கள் மீண்டும் வருவார்களா? அவர்களை யார் கடத்தி வைத்துள்ளார்கள்? என்பதை கண்டறிந்து மீட்டுத்தரவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரை கோவை ரேஸ்கோர்ஸ் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்றார்.

    அதேபோன்று கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வக்கீல் சந்திரகுமார் என்பவர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார்.

    மேட்டுப்பாளையம் தொகுதி வாக்காளர் என்ற முறையில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சின்னராஜை செல்போனில் தொடர்பு கொண்டபோது கிடைக்கவில்லை. நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    தற்போது எங்கள் சட்டமன்ற உறுப்பினர் எங்கு உள்ளார்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. எனவே அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×