என் மலர்
செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி புதுவையிலும் மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்
புதுச்சேரி:
சென்னை மெரினா கடற்கரை, காஞ்சிபுரம், கோவை என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. விடிய, விடிய தொடர்ந்த மாணவர்களின் போராட்டம் இன்று (புதன் கிழமை) 2-வது நாளாகவும் நீடிக்கிறது.
இதே போல் புதுவையில் மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. நேற்று காலை புதுவை கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் புதுவை பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் புதுவை- கடலூர் சாலையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடினர். அவர்கள் ரோடியர் மில் திடலில் தொடர் தர்ணா போராட்டம் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசு, பீட்டா அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மாணவர்களின் போராட்டம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். அதோடு இரவு முழுவதும் விடிய, விடிய மாணவர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இன்று 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இன்று ஒன்று கூடினார்கள்.
இதனால் கடலூர் சாலையிலும், ரோடியர் மில் திடலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.