search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து அவமானப்படுத்தியதால் போலீஸ்காரரை கொன்றேன்: கல்லூரி அதிபர் வாக்குமூலம்
    X

    தொடர்ந்து அவமானப்படுத்தியதால் போலீஸ்காரரை கொன்றேன்: கல்லூரி அதிபர் வாக்குமூலம்

    மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி தொடர்ந்து அவமானப்படுத்தியதால் போலீஸ்காரரை கொன்றேன் என்று கைதான கல்லூரி அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை போலீஸ்காரர் அருணகிரி கொலை தொடர்பாக அவருடைய மனைவியின் அக்காள் கணவர் சிவானந்தம் ராபர்ட் (வயது 45), கடலூரை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த கர்ணாஜோதி, கடலூரை சேர்ந்த சதீஷ்குமார், வெங்கட் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    கைதான சிவானந்தம் ராபர்ட் தவளக்குப்பத்தில் பி.எட்., கல்லூரி நடத்தி வருகிறார்.

    கொலை தொடர்பாக அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் விருத்தாசலத்தில் திருமணம் செய்து உள்ளேன். எனது மனைவியின் தங்கை நெய்ரோஜாவிற்கு திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்தனர். போலீஸ்காரர் அருணகிரி எனக்கு ஏற்கனவே நண்பராக இருந்தார். அவருக்கு நெய்ரோஜாவை திருமணம் செய்து கொடுக்கலாம் என கருதினேன்.

    இதுபற்றி எனது மாமனார் வீட்டில் தெரிவித்தேன். அருணகிரியின் போட்டோவை நெய்ரோஜாவிடம் காண்பித்த போது மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார் எனக்கு வேண்டாம் என்று கூறினாள்.

    ஆனாலும் அவளை நான் சமாதானப்படுத்தினேன். நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன். உனக்கு பொருத்தமாக இருப்பான் என்று கூறினேன். இதனால் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

    நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்து திருமணத்தை நடத்தி முடித்தேன்.

    எனக்கு தவளக்குப்பத்தில் சொந்த வீடு உள்ளது. அங்கு இருவரையும் குடி அமர்த்தினேன். நானும் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள்.

    இந்த நிலையில் நான் நெய்ரோஜாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அருணகிரி சந்தேகப்பட்டார். ஆனால் அப்படி எங்களுக்குள் எந்தப் பழக்கமும் கிடையாது.

    நானும் அருணகிரியும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பது வழக்கம். போதை தலைக்கேறியதும் இந்த வி‌ஷயத்தை சொல்லி என்னிடம் தகராறு செய்வார். உன் மனைவியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னாலும் கேட்பதில்லை.

    அடிக்கடி இது சம்பந்தமாக தகராறு செய்தார். எனவே நீ என் வீட்டில் இருக்கக் கூடாது என கூறி வீட்டை காலி செய்ய சொன்னேன்.

    இதனால் முதலியார் பேட்டை போலீஸ் நிலைய குடியிருப்புக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார். ஆனால் என்னுடன் பேசுவதை அருணகிரி நிறுத்தவில்லை. அடிக்கடி என்னிடம் பணம் கேட்பார் கொடுப்பேன். உயர்ந்த விலையில் உள்ள செல்போன் ஒன்று கேட்டார். அதையும் நான் வாங்கி கொடுத்தேன். இதன் பிறகு அவர்கள் சாந்தி நகரில் வீடு பார்த்து சென்றனர்.

    ஒரு தடவை நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த அருணகிரி என்னை இடைமறித்து தகராறு செய்தார். என்மனைவியுடன் இன்னும் நீ கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய் என கூறி தாக்கினார். மோட்டார் சைக்கிளில் இருந்து என்னை கீழே தள்ளி விட்டார். இதில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதற்காக நல்லாம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அருணகிரி தாக்கிய வி‌ஷயத்தை நான் மற்றவர்களிடம் சொல்லவில்லை. ஆனால் எனது சகோதரர்களும், குடும்பத்தினரும் இதை தெரிந்து கொண்டனர். அவர்கள் அருணகிரி மீது ஆத்திரத்தில் இருந்தனர். அருணகிரியை ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    இந்த சம்பவம் நடந்த பிறகும் கூட அருணகிரி என்னிடம் வந்து பேசினார். சில நாள் கழித்து மீண்டும் இது சம்பந்தமாக அவர் தகராறு செய்தார். அவருடைய செயல் என்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது. தொடர்ந்து பிரச்சினை செய்ததால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

    கடலூரை சேர்ந்த முத்துராஜ் எனது நண்பர் ஆவார். அவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தேன். அவரிடம் இந்த வி‌ஷயத்தை பற்றி கூறினேன்.

    அவர் அருணகிரியின் கதையை முடித்து விடலாம் என்று கூறினார். அவர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி கொலை செய்ய முடிவு செய்தோம். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள நாவற்குளம் பகுதியில் நாங்கள் அமர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அங்கு மது குடிக்க வரும்படி அருணகிரியை அழைத்தேன். அவர் அங்கு வந்தார். அந்த இடத்தில் நானும், முத்துராஜும் தயாராக இருந்தோம். 3 பேரும் மது குடித்தோம்.

    நன்றாக குடித்து இருந்த அருணகிரி போதை மயக்கத்தில் இருந்தார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என கருதி மது பாட்டிலால் அவரது தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் ரத்தம் கொட்டி அங்கேயே உயிர் இழந்தார்.

    பிணத்தை அங்கேயே போட்டு விட்டு சென்று விடலாம் என கருதினோம். ஆனால் போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என கருதி பிணத்தை மறைக்க திட்டமிட்டோம். எனவே எனது காரின் டிக்கியில் பிணத்தை ஏற்றி கடலூர் கொண்டு சென்றோம்.

    அங்கு சென்ற பிறகும் பிணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. 2 நாட்களாக காரிலேயே வைத்து இருந்தோம். இனி பிணம் அழுகி நாற்றம் வந்தால் வெளியே தெரிந்து விடும் என கருதி அதை எரித்து விடமுடிவு செய்தோம்.

    இதற்காக முத்துராஜ் கடலூரை சேர்ந்த சதீஷ் குமார், வெங்கட் மற்றும் வில்லியனூரை சேர்ந்த கருணாஜோதி ஆகியோரை அழைத்து வந்தார். நாங்கள் பிணத்தை காட்டுப்பகுதிக்கு எடுத்து சென்று எரித்தோம். பின்னர் சாம்பலை கடலில் வீசி விட்டோம்.

    கொலை நடந்ததற்கு பிறகு அருணகிரி வீட்டுக்கு சென்று நெய்ரோஜாவை சந்தித்தேன். அப்போது கணவரை காணவில்லை என்று கூறினார்.

    அருணகிரி அடிக்கடி நான் சாமியாராகப் போகிறேன் என்று கூறுவார். இதை வைத்து ஒருவேளை அவர் சாமியாராவதற்காக வடமாநிலங்களுக்கு சென்று இருக்கலாம். ஆனாலும் திரும்பி வந்து விடுவார் என்று நெய்ரோஜாவிடம் சமாதானம் கூறினேன்.

    பல நாட்களாகியும் அருணகிரி திரும்பி வராததால் லாஸ்பேட்டை போலீசில் நெய்ரோஜா புகார் கொடுத்தார்.

    போலீசார் என் மீது சந்தேகப்பட்டு விசாரித்தனர். நான் அவர்களிடம் அருணகிரி சாமியாராவதற்கு வட மாநிலங்களுக்கு சென்று இருப்பான் அல்லது இலங்கை, பிரான்சுக்கு சென்று இருப்பான் என்று கூறினேன்.

    மேலும் பிரான்சிலும் சிலர் அவரை பார்த்ததாக கதை கட்டிவிட்டேன். இதனால் போலீசார் என்னிடம் மீண்டும் விசாரிக்கவில்லை. இனி கண்டுபிடிக்க மாட்டார்கள் என கருதினேன். 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் என்னை அழைத்து போலீசார் விசாரித்தனர். கடலூர் முத்துராஜையும் என் வழியாக போனில் அழைத்து இங்கு வரச் செய்தனர். இருவரிடமும் மாறி மாறி விசாரித்தார்கள். இனி தப்ப முடியாது என கருதிய நான் உண்மையை சொல்லி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    ஆரம்பத்திலேயே சிவானந்தம் ராபர்ட் மீது சந்தேகம் இருந்தது. எனவே அவரிடம் விசாரணை மேற்கொண்டோம். அதில் உரிய தகவல் கிடைக்காததால் அமைதி காத்தோம். ஆனாலும் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்ததால் கடந்த 6 மாதமாக ரகசியமாக கண்காணித்தோம்.

    மேலும் அருணகிரி மனைவி மற்றும் குடும்பத்தினரையும் கண்காணித்து வந்தோம். அருணகிரியின் நண்பர்கள், சிவானந்தம் ராபர்ட் நண்பர்கள் பட்டியலை சேகரித்து அவர்களையும் கண்காணித்தோம். அருணகிரியிடம் யார்-யார் போனில் பேசினார்கள் என்ற பட்டியலை சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தினோம்.

    கடைசியாக அருணகிரியிடம், சிவானந்தம் ராபர்ட் தான் பேசி இருந்தார். இதன் காரணத்தாலும் அவருடைய பல்வேறு நடவடிக்கைகளாலும் எங்களுக்கு சிவானந்தம் ராபர்ட் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்திய போது முழு உண்மையும் தெரிய வந்தது. அவரும் முத்துராஜும் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறினார்.

    இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ் பெக்டர் கள் வீரபத்திரன், தயாளன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, போலீஸ்காரர்கள் அம்பேத்கார், சத்தியமூர்த்தி, சுபஸ்டீபன், இசைவேந்தன், வசந்தகுமார், தட்சணாமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×