என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது சிவில் சட்டம்: இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது ஜி.கே.வாசன் அறிக்கை
    X

    பொது சிவில் சட்டம்: இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது ஜி.கே.வாசன் அறிக்கை

    மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சிப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளது. இது ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக, மதச்சார்பற்ற நாடு. இங்கு பல்வேறு இனம், மொழி, மதம், சாதிகள் இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும், சமூக நல்லிணக்கத்தைப் பேணிப்பாதுகாப்பதும் நம் நாட்டிற்கு உள்ள பெருமையாகும். இதனை கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நல்ல முயற்சிகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஆனால் பல்வேறு சமூகங்களுக்கும் உள்ள தனிச் சட்டங்களில் குறுக்கிடும் வகையில் புதிதாக பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.

    இந்த பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாட்டில் வாழும் மக்கள் அவரவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கு உட்பட்டு சொத்துரிமை, தனிப்பட்ட உரிமைகளான திருமணம், பராமரிப்பு, உள்ளிட்ட பல சட்ட உரிமைகளை பறிகொடுத்தும், வேறுபாடுகளை கலைந்தும் ஒரே கட்டமைப்பிற்குள் வர நேரிடும். அவ்வாறு ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாய சட்டத்தால் பொது மக்கள் அவர்களது சமூகம் சார்ந்த உரிமைகளை இழக்க நேரிடும். இதனால் பெரும்பான்மை இன மக்களும், சிறுபான்மை இன மக்களும் பல்வேறு வகையில் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

    எனவே ஒரு சட்டம் கொண்டுவர முயற்சி செய்வதற்கு முன்பே அந்த சட்டத்தால் பொது மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அது தான் நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் செயல்பாடாக இருக்க முடியும். கடந்த பல மாதங்களாக இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, நதிநீர் பிரச்சினை, அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு போன்றவைகளும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இவைகளுக்கு நல்ல தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    ஆனால் இது போன்ற முக்கியப் பிரச்சினைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது. 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டிருக்கும் நம் நாட்டில் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் இணைந்து நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக சட்டத்தையும், திட்டங்களையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வரும் அனைத்து நல்ல முயற்சிகளிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட வேண்டும்.

    மேலும் அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் முழுமையாக, சரியாக, முறையாக கடைப்பிடித்து மகிழ்வுடன் வாழவும், மக்களின் எதிர்காலம், நாட்டின் வருங்கால வளர்ச்சி ஆகியவற்றை முன்னிருத்தியும் நாட்டினை வழி நடத்தி செல்ல வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே மத்திய பா.ஜ.க. அரசு பொதுமக்கள் நலன் கருதி பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×