என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே பாலத்தில் கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
    X

    ஜெயங்கொண்டம் அருகே பாலத்தில் கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

    ஜெயங்கொண்டம் அருகே பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.

    ஜெயங்கொண்டம்:

    சென்னை மடிப்பாக்கம் கார்த்திகாபுரத்தை சேர்ந்தவர்கள் முரளிகிருஷ்ணன், அரவிந்த் (வயது 30). நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இவர்கள் கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலான உப்பிலியப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து 2 பேரும் தங்களது குடும்பத்தினருடன் நேற்றிரவு ஒரு காரில் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு புறப்பட்டனர். காரை அரவிந்த் ஓட்டினார்.

    இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி சென்னை- கும்பகோணம் சாலையில் உள்ள வெள்ளமதகு பாலத்தில் வந்தபோது எதிர் பாராதவிதமாக கார் நிலை தடுமாறி பாலத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி அரவிந்த் மற்றும் அவரது மகன் சஷ்வத் (1½) மற்றும் முரளிகிருஷ்ணன் மனைவி சந்தோஷி (29) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    முரளிகிருஷ்ணன், அவரது மகன் அக்‌ஷத் (5), அரவிந்த் மனைவி சரண்யா ஆகியோர் பலத்த காயம டைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சங்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று ,காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் பலியான அரவிந்த் கப்பல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சந்தோஷி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற போது விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×