என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பம்பட்டு அருகே ஓய்வுபெற்ற பள்ளி ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு: போலீசார் விசாரணை
    X

    வேப்பம்பட்டு அருகே ஓய்வுபெற்ற பள்ளி ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு: போலீசார் விசாரணை

    வேப்பம்பட்டு அருகே ஓய்வுபெற்ற பள்ளி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செவ்வாப்பேட்டை:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, திருநகரில் வசித்து வருபவர் நந்த குமார். ஓய்வு பெற்ற பள்ளி ஊழியர். இவரது மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக நந்தகுமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. அறைகளில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு 100 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்த குமார் கொள்ளை குறித்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    நந்தகுமார் வீட்டை பூட்டி விட்டு செல்வதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளது. சுமார் 2 மணி நேர இடைவெளியில் மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்று விட்டனர்.

    எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தகுமார் வீட்டில் சமையல் அறையை இடித்து அகலப்படுத்தும் பணி நடந்து உள்ளது. இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இதையடுத்து தொழிலாளர்கள் 4 பேர் மற்றும் நந்தகுமார் வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண் ஆகிய 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×