search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் இன்று பகல் கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலி
    X

    கடலில் மூழ்கி பலியானவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் மீட்டு வந்ததை காணலாம்.

    கன்னியாகுமரியில் இன்று பகல் கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலி

    • மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.
    • மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்ப்பதோடு, கடலில் ஆனந்த குளியலிடுவதும் வழக்கம்.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாகவும் ,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாகவும் இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக நீராடினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உள்பட 3 பேர் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்னோ பார்க் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் மணி (வயது 30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரி வந்தனர்.

    தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் இன்று பகல், கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியை பார்க்க புறப்பட்டனர்.

    அப்போது கடல் அலை வேகமாக இருந்தது. இருப்பினும் அந்த பகுதியில் ஏராளமானோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.

    இதனை தொடர்ந்து 3 பேரும் கடலில் குளிக்க இறங்கினர். அவர்கள் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் 3 பேரும் சிக்கினர்.

    இதனை பார்த்த கடலில் குளித்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதனை கேட்ட மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்க முடிந்தது.

    மணி மற்றும் சுரேசை கடல் அலை இழுத்துச் சென்று விட்டது. இதுபற்றி கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது மற்றொரு அலை 2 பேரும் கடற்கரைக்கு கொண்டு வந்து வீசியது. அவர்களை உடனடியாக மீனவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி மற்றும் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிந்து, கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×