search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நத்தம் அருகே 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
    X

    16-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள்.

    நத்தம் அருகே 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

    • வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்க பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம்.
    • எல்லைக்கு உள்ளிட்ட இடங்களில் சூலம் குறியிட்ட 19 அடையாளங்கல் நடப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    நத்தம் அருகே நத்தம் பாளையக்காரர் லிங்கையநாயக்கர் அன்னதானமடம் அளித்தற்கான 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஷ்வநாததாஸ், தலித்சந்திரசேகர், ரத்தினமுரளிதர் ஆகியோர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அன்னதான மடத்திற்கு நத்தம் பாளையக்காரர் லிங்கம நாயக்கர் கல்வெட்டு பட்டையம் ஸ்வஸ்தி ஸிரி சாலி வாகன சகாப்தம் 1571, கலியுகம் 4750, (இதற்கு‌ ஆங்கில ஆண்டு 1649) தினம் செல்லா நின்ற விரோதி வருடம் கார்த்திகை மாதம் ஐந்தாம் நாள் சோம வாரமும் திருதிகையும் மூல நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் யாதவ கொக்கி குல காப்பவர் ஆகிய தொந்திலிங்கைய நாயக்கர் மகன் முத்திலிங்கைய நாயக்கர்.

    அவர்கள் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம். அதன் அருகே உள்ள மினங்கு மக குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை விவரம் பூதக்குடி மலை நாளிக்கல் கருங்கல் பாறை இரக்கம் இது ஈசான மூலை (வடகிழக்கு எல்லை) அதன் நேர் கட்டுக்கால்,உசில மரம் இது அக்னி மூலை (தென்கிழக்கு எல்லை) கொங்கான கரை (காட்டு ஓரம்) இது கன்னி மூலை (தென்மேற்கு எல்லை) வாயு மூலை (வடமேற்கு எல்லை) கோப்பையம் பட்டி குளத்து மதகு அன்னதான மடத்திற்கு இந்த எல்லைகள் கொண்ட பள்ளப்பட்டி ஊர் குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்கள் மடத்திற்கு தானமாக வழங்கினார்.

    இந்த எல்லைக்கு உள்ளிட்ட இடங்களில் சூலம் குறியிட்ட 19 அடையாளங்கல் நடப்பட்டுள்ளது. இந்நிலங்களில் நஞ்சை புஞ்சையில் அரசு நிர்வாக நிலங்கள் நீக்கலாக புஞ்சை 903 நஞ்சை 23 இவை அஷ்ட போக தேச சுவாமிகள் தனச சந்திரர் நிர்வாகிக்கும் தர்ம பரிபாலனம் பண்ணி கொண்டு வருவார். அவருடன் மற்றவர்களும் பரிபாலனம் பண்ணி வர இக்கல்லையும் மடத்தையும் யாரும் சேதப்படுத்தினால் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவம் வரும். என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்வெட்டு 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், லிங்கயநாயக்கர் மகன் முத்துலிங்கயநாயக்கர் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர் பள்ளபட்டி கிராமமாகும். இந்த அன்னதான மடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.

    இதுபோன்ற பழமையான கல்வெட்டு மண்டபங்கள், நினைவுச்சின்னங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×