search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேப்பூர் அருகே தறி கெட்டு ஓடிய பஸ் மோதி 125 ஆடுகள் பலி- உரிமையாளரும் உயிரிழப்பு
    X

    விபத்தில் இறந்த லட்சுமணன் - பஸ் மோதியதில் ஆடுகள் உயிரிழந்து கிடப்பதை காணலாம்.

    வேப்பூர் அருகே தறி கெட்டு ஓடிய பஸ் மோதி 125 ஆடுகள் பலி- உரிமையாளரும் உயிரிழப்பு

    • ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
    • சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    வேப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகன் லட்சுமணன் (வயது 40) ஆடுகள் மேய்த்து வந்தார். இவர்களது உறவினர்களான ராமர், செல்வம், அய்யப்பன் ஆண்டுதோறும் ஆடுகளை வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு ஆடுகளுக்கு பட்டியமைத்து கிடை போட்டு வருவது வழக்கம்.

    அதன்படி காசிநாதன் சுமார் 300 ஆடுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை பகுதிகளில் ஆடுகளுக்கு பட்டியமைத்து விற்பனை செய்து வந்தனர்.

    நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஆடுகளை காசிநாதன், அவரது மகன் லட்சுமணன் எலவனாசூர் கோட்டையில் இருந்து வேப்பூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓட்டி சென்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.

    அந்த பஸ் வேப்பூர்-சேப்பாக்கம் மணி முக்தாறு அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. மேலும் லட்சுமணன் மீதும் பஸ் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 125 ஆடுகள் பலியானது. ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால் சாலை முழுவதும் ஆடுகளின் உடல் சாலையின் நீண்ட தூரம் கிடந்தது.

    மேலும் சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளம் போல் ஓடியது.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த ஆடுகளை எல்லாம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த ஆடுகள் எத்தனை மற்றும் படுகாயம் அடைந்த ஆடுகள் குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து காசிநாதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    Next Story
    ×