என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜவுளிகள் தேக்கம் எதிரொலி- பள்ளிபாளையத்தில் விசைத்தறி கூடங்கள் 10 நாட்கள் மூடல்
- தொடர்ந்து உற்பத்தி நடந்தாலும் தொழில் சரிவு நிலையில் தான் காணப்படுகிறது.
- தற்போது தொழில் உள்ள சூழ்நிலை கருதி பொங்கலுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக ஜவுளி தொழில் உள்ளது. இதனை நம்பி தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மிக முக்கிய தொழிலாக உள்ளது.
இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50,000 குடும்பத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நூல் விலை ஏற்ற, இறக்கமாக இருப்பதால் விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகள் தேங்கியுள்ளன. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், தீபாவளிக்கு பிறகு தொழில் எதிர்பார்த்த அளவு இல்லை. விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு, ஜவுளிகள் தேக்கம் போன்றவற்றால் தொழில் நெருக்கடி ஏற்பட்டு தொய்வு நிலையில் உள்ளது.
தொடர்ந்து உற்பத்தி நடந்தாலும் தொழில் சரிவு நிலையில் தான் காணப்படுகிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகை காலத்தில் 3 நாள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது தொழில் உள்ள சூழ்நிலை கருதி பொங்கலுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்






