என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவிரி வெள்ளப்பெருக்கு
காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: பவானியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம்
- ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1.85 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி யாற்றில் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் பவானி, அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 முறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி மட்டுமே நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் மீண்டும் வீடு திரும்பினர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உடைமை களை மூட்டை முடிச்சு கட்டி முகாம்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.
தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் விஜய் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இதேப்போல் கருங்கல்பாளையம் காவிரிக்கரை, அம்மாபேட்டை, கொடுமுடி பகுதிகளில் வருவாய் துறையினர் முகாமிட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






