என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
    X

    உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி

    • ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
    • கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் நேற்று பிரேசிலுடன் மல்லுகட்டியது. இதில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் 7-5, 7-2, 7-2 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பெட்ரோ மோமெட்டோவை வீழ்த்தினார்.

    இதேபோல் இந்தியாவின் அனாஹத் சிங் 7-4, 7-0, 7-2 என்ற செட்டில் லாரா சில்வாவையும், அபய்சிங் 7-3, 7-1, 7-1 என்ற செட்டில் டியாகோ கோப்பியையும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை எதிர்த்து ஆட இருந்த புருனா மார்செசி விலகியதால் ஜோஸ்னா களம் இறங்காமலேயே வெற்றி பெற்றார்.

    முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது.

    இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஹாங்காங்- சுவிட்சர்லாந்து, ஜப்பான்- மலேசியா, ஆஸ்திரேலியா- நடப்பு சாம்பியன் எகிப்து அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×