search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்தேன்- ஹரிகா உருக்கம்
    X

    வெண்கலப்பதக்கத்துடன் ஹரிகா

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்தேன்- ஹரிகா உருக்கம்

    • இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன்.
    • நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா 1-வது பெண்கள் அணியில் இடம் பிடித்தவர்களில் ஹரிகா துரோணவல்லியும் ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் சொந்த மண்ணில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக உடல்நிலையை பொருட்படுத்தாமல் களம் இறங்கினார். 7 சுற்றுகளில் ஆடிய அவர் அனைத்து ஆட்டங்களிலும் 'டிரா' செய்திருந்தார்.

    வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் சூடிய பிறகு 31 வயதான ஹரிகா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய செஸ் அணிக்காக எனது பயணம் 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது 13-வது வயதில் தொடங்கியது. இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன். இந்திய பெண்கள் அணிக்காக பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு ஒரு வழியாக இப்போது நனவாகி இருக்கிறது. நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்ட போது, எனது டாக்டர் எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த போட்டியில் விளையாடுவது சாத்தியம் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு எனது சிந்தனை, செயல் எல்லாமே ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஐக்கியமானது. அதற்காக ஒவ்வொரு அடியையும் முழு அர்ப்பணிப்புடன் எடுத்து வைத்தேன். வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிறகு தான் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தேன். களத்தில் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்த தருணத்துக்காகத் தான் காத்திருந்தேன். இப்போது அதை அடைந்து விட்டேன். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணி பதக்கத்தை உச்சிமுகர்ந்து விட்டது.

    இவ்வாறு ஹரிகா கூறியுள்ளார்.

    Next Story
    ×