search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெயர் பலகையை நினைவு பரிசாக எடுத்து சென்ற செஸ் வீரர்கள்- சுவாரஸ்யமான தகவல்கள்
    X

    பெயர் பலகையை நினைவு பரிசாக எடுத்து சென்ற செஸ் வீரர்கள்- சுவாரஸ்யமான தகவல்கள்

    • உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது.
    • மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 12 நாட்கள் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெளிநாட்டு வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் இரண்டு மெகா அரங்குகள் உருவாக்கப்பட்டு அதில் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. 'சென்சார்' உதவியுடன் இயங்கும் இந்த செஸ் போர்டுகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இவை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் ஏறக்குறைய 360 போர்டுகள் வாடகை அடிப்படையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) வழங்கி இருந்தது. போட்டி முடிந்ததும் அவற்றை 46 நாடுகளுக்கு 2, 3, 4 வீதம் இலவசமாக 'பிடே' வழங்கி இருக்கிறது. மீதமுள்ள செஸ் போர்டுகள் இந்திய செஸ் சம்மேளனம் வசம் இருக்கிறது. அவற்றை இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    11-வது மற்றும் கடைசி சுற்று போட்டி முடிந்ததும் வீரர், வீராங்கனைகள் இருக்கையின் பக்கவாட்டு ஸ்டேண்டில் வைக்கப்பட்டிருந்த தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பலகை, கடைசியாக எழுதிய ஸ்கோர் சீட்டு, பேனா உள்ளிட்டவற்றை ஒலிம்பியாட்டில் விளையாடியதற்கான நினைவு பொருளாக எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள 21 நட்சத்திர ஓட்டல்களில் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் நாட்டு உணவுடன், விதவிதமான இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம். ஆனால் தமிழகத்தில் அது போன்ற புகார்கள் ஏதும் வீரர்கள் தரப்பில் இருந்து வரவில்லை. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாக போலந்து, மால்டோவா, மான்டினெக்ரோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூறி நெகிழ்ந்தனர்.

    இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 95 நடுவர்கள் பணியாற்றினார்கள். இந்திய நடுவர்களின் தொழில்நுட்பமும், தரமும், செயல்பட்ட விதமும் மிக அருமையாக இருந்தது என்று போலந்து முன்னணி நடுவர் டோமெக் பாராட்டியுள்ளார்.

    சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு பைபரால் செய்யப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பம், ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட குடை, தொப்பி மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவை பேக்கில் போட்டு வழங்கப்பட்டது.

    உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது. அத்துடன் இந்த போட்டியை முன்பு எப்போதும் இல்லாததை விட அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளை தங்கள் மண்ணில் நடத்த மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டுவதாக செஸ் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×