என் மலர்
விளையாட்டு

5-வது சுற்றில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய இந்திய ‘பி’ அணி வீரர்களை படத்தில் காணலாம்.
செஸ் ஒலிம்பியாட்: இந்திய 'பி' அணி 6-வது சுற்றில் இன்று அர்மெனியாவுடன் மோதல்
- ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது.
- நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
சென்னை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. டி.குகேஷ், பி.அதிபன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நிகல் 'டிரா' செய்தார். பிரக்ஞானந்தா அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இந்திய 'ஏ' அணி 2.5-2.5 என்ற கணக்கில் ருமேனியாவுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தியது.
ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டை பிரேக்கரில் இந்திய 'பி' அணி தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 'ஏ' அணி 9 புள்ளியுடன் 4-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
இன்று 6-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. இதில் இந்திய 'பி' அணி அர்மெனியாவை எதிர் கொள்கிறது. முன்னிலையில் உள்ள இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானையும், இந்திய 'சி' அணி லிதுவேனியாவையும் எதிர்த்து விளையாடுகிறது.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. இந்திய 'பி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜாவிடம் தோற்றது.
இந்திய 'சி' அணி பிரேசிலுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி, ஜார்வியா, ருமேனியா ஆகிய 3 அணிகள் தலா 10 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளன. இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 18-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 7 புள்ளியுடன் 29-வது இடத்திலும் உள்ளன.
இன்றைய 6-வது சுற்றில் இந்திய 'ஏ' அணி ஜார்ஜியாவுடனும், இந்திய 'பி' அணி செக்குடியரசுடனும், இந்திய 'சி' அணி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகின்றன.
நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.






