என் மலர்
விளையாட்டு

சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்
- என்ன செய்ய வேண்டும் என்பதில் கில் தெளிவாக இருக்கிறார்.
- நாங்கள் எங்கள் அணுகு முறையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
பர்மிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தார். அவர் 114 ரன்னுடனும், ஜடேஜா 41 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஜெய்ஸ்வால் (87ரன்), கே.எல். ராகுல் (2), கருண் நாயர் (31)ரிஷப் பண்ட் (25) , நிதீஷ் குமார் ரெட்டி (1) ஆகியோர் அவுட் ஆனார்கள்.
கேப்டன் பதவியில் தொடர்ந்து 2-வது சதத்தை பதிவு செய்த 4-வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். இங்கிலாந்து மண்ணில் அசாரூதீனுக்கு பிறகு கேப்டன் பதவியில் தொடர்ந்து 2-வது சதத்தை சுப்மன் கில் அடித்துள்ளார்.
சுப்மன் கில் அற்புதமான கேப்டன் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சுப்மன் கில் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாக உள்ளது. நம்ப முடியாத வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கேப்டனாக அவர் அற்புதமாக செயல்படுகிறார். என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். மேலும் நாங்கள் எங்கள் அணுகு முறையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை.
நாங்கள் பேட்டிங்கை ரசிக்கிறோம். ஆட்டத்தை நீண்ட நேரம் எடுத்து செல்ல தயாராக இருப்பவர்களுக்கு தான் இந்த யோசனை. நாங்கள் அனைவரும் ஒரே மன நிலையில் இருக்கிறோம். லீட்ஸ் ஆடுகளத்தை ஒப்பிடுகையில் இங்கு வேகப்பந்தின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது.
சதம் அடிக்க முடியாமல் வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.
ஜெய்ஸ்வால் 13 ரன்னில் சதத்தை தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






