என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழக ரசிகர்களை மீண்டும் மகிழ்வித்த அர்ஜூன் தேஷ்வால்: 71-வது முறையாக சூப்பர் 10 எடுத்து சாதனை
    X

    தமிழக ரசிகர்களை மீண்டும் மகிழ்வித்த அர்ஜூன் தேஷ்வால்: 71-வது முறையாக 'சூப்பர் 10' எடுத்து சாதனை

    • தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 12-வது புரோ கபடி லீக்கின் 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 18 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாசுக்கு கிடைத்த 6-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியது. 7 போட்டியில் தோல்வியை தழுவியது.

    தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் முக்கிய பங்கு வகித்தார். அரியானாவுக்கு எதிராக கடந்த 3-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அவர் தமிழக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதேபோல நேற்றும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    அர்ஜூன் தேஷ்வால் 26 புள்ளிகளை எடுத்தார். இதன் மூலம் புரோ கபடி லீக் போட்டி வரலாற்றில் 71-வது முறையாக (127 ஆட்டம்) 'சூப்பர் 10' எடுத்து சாதனை படைத்து 3-வது இடத்தை பிடித்தார். அவர் பவன் ஷெராவத்தை முந்தினார். பவன் 70-வது தடவை (142) 'சூப்பர் 10' எடுத்தார். பர்தீப் நர்வால் 88 முறையும் (190 ஆட்டம்), மனீந்தர் சிங் 80 தடவையும் (164), சூப்பர் 10 புள்ளிகளை பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணியின் மற்ற வீரர்களில் நரேந்தர் 6 புள்ளியும், ஆசிஷ், நிதேஷ்குமார் தலா 5 புள்ளியும், ஹிமான்சு 3 புள்ளியும் எடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் சென்னையில் வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. நேரு உள்விளையாட்டு அரங்கில் அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் (மும்பை, பெங்களூரு) தோற்றது.

    தமிழ் தலைவாஸ் தனது 14-வது ஆட்டத்தில் புனேயை வருகிற 11-ந்தேி எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி மீண்டும் அரியானாவை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சை-அரியானா அணிகளும், 9 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் புனே-மும்பை அணிகளும் மோதுகின்றன.

    Next Story
    ×