என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி
- பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
- ஒரு அணி மட்டும் தகுதி பெற வேண்டும்.
புதுடெல்லி:
புரோகபடி 'லீக்' போட்டியின் 4-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்த போட்டியில் 'லீக்' முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு நுழையும்.
புனே, டெல்லி (தலா 26 புள்ளிகள்) முதல் 2 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. அதை தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை (தலா 20 புள்ளி), பெங்களூரு (18) பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 50-32 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா, 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ஜெய்ப்பூர் அணியும் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஒரு அணி மட்டும் தகுதி பெற வேண்டும்.
8-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.
தமிழ் தலைவாஸ், பாட்னா, குஜராத், உ.பி., பெங்கால் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன.
தமிழ் தலைவாசுக்கு போட்டிகள் முடிந்து விட்டன. பாட்னாவுக்கு 2 ஆட்டமும் குஜராத், உ.பி., பெங்காலுக்கு தலா ஒரு ஆட்டமும் எஞ்சியுள்ளன.
இன்று நடைபெறும் போட்டிகளில் அரியானா-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 7.30), பெங்களூரு-பெங்கால் (இரவு 8.30), டெல்லி-பாட்னா (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.






