என் மலர்
விளையாட்டு

புரோ கபடி: சாம்பியன் பட்டம் வெல்வது யார்? இறுதிப்போட்டியில் டெல்லி-புனே இன்று பலப்பரீட்சை
- நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன.
- 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது.
புதுடெல்லி:
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. அஷூ மாலிக் தலைமையிலான தபாங் டெல்லி அணி லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்றதுடன், முதலாவது தகுதி சுற்றில் டைபிரேக்கரில் (6-4) புனேரி பால்டனை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டெல்லி 2019-ம் ஆண்டில் 2-வது இடமும், 2021-22-ம் ஆண்டில் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது.
அஸ்லாம் இனாம்தார் தலைமையிலான புனேரி பால்டன் அணி லீக் சுற்று பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது தகுதி சுற்றில் சரிவில் இருந்து மீண்டு வந்து 50-45 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. புனே அணி 2022-ம் ஆண்டு 2-வது இடமும், 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் கைப்பற்றி இருந்தது.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன. 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது. இதில் டெல்லி 2 ஆட்டத்திலும், புனே ஒரு ஆட்டத்திலும் வெற்றி கண்டன. இன்றைய ஆட்டத்திலும் இரு அணிகளும் நீயா-நானா? என கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






