என் மலர்
விளையாட்டு

3-வது இடத்துக்கான போட்டி வெண்கல பதக்கம் வெல்ல இந்திய அணி ஆர்வம்- அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை
- வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
- இந்த ஆட்டம் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் 3-வது இடமான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் அர்ஜென்டினா சிறந்த அணி என்பதால் கடுமையாக போராட வேண்டும்.
இந்திய அணி 'லீக்' சுற்றில் சிலி (7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தது. அரைஇறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
அர்ஜென்டினா அணி 'லீக்' சுற்றில் ஜப்பான் (4-1), சீனா (3-1) ஆகியவற்றை வீழ்த்தியது. நியூசிலாந்துடன் (3-3) 'டிரா' செய்தது. கால்இறுதியில் நெதர்லாந்தை (1-0) தோற்கடித்தது. அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்றது.
முன்னதாக நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து (மாலை 3 மணி), 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (மதியம் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் 9-வது இடத்துக்கு இங்கிலாந்து-அயர்லாந்து (இரவு 8 மணி), 11-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5.30 மணி), 13-வது இடத்துக்கு ஜப்பான்-மலேசியா (மாலை 3 மணி), 15-வது இடத்துக்கு சிலி-சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நேற்றைய போட்டி முடிவில் ஆஸ்திரியா, வங்கதேசம், தென்கொரியா, சீனா, எகிப்து, கனடா, நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் முறையே 17 முதல் 24-வது இடங்களை பிடித்தன.






