என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
- இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது.
- இந்திய அணி கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. நேற்றுடன் லீக் முடிவடைந்தன.
'பி' பிரிவின் இறுதி லீக்கில் இந்தியா- சுவிட்சர்லாந்து அணிகள் மதுரையில் நேற்றிரவு மல்லுகட்டின. மழையால் சற்று தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வரிந்து கட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு முதல் பாதியில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். பிற்பாதியில் மேலும் ஒரு கோல் திணித்தனர்.
முடிவில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது. அதே சமயம் சுவிட்சர்லாந்து 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெளியேறியது.
இதே போல 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி (ஏ பிரிவு), 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகிய அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. 2-வது இடத்தை பிடித்த சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து (சி பிரிவு), பெல்ஜியம் (டி) ஆகியவையும் தகுதி பெற்றன.
இன்று ஓய்வு நாளாகும். ரேங்கிங் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. கால்இறுதி போட்டிகள் நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நியூசிலாந்து (மதியம் 12.30 மணி), ஜெர்மனி-பிரான்ஸ் (மாலை 3 மணி), நெதர்லாந்து-அர்ஜென்டினா (மாலை 5.30) அணிகள் மோதுகின்றன.
17 முதல் 24 இடங்களுக்கான போட்டி நாளை நடக்கிறது. மதுரையில் நடைபெறும் ஆட்டங்களில் நமீபியா-ஆஸ்திரியா (காலை 9 மணி), வங்காளதேசம்-ஓமன் (காலை 11.30 மணி) தென்கொரியா-எகிப்து (பிற்பகல் 2 மணி), சீனா-கனடா (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-சிலி (பிற்பகல் 12.30 மணி), தென் ஆப்பிரிக்கா-மலேசியா (மாலை 3 மணி), சுவிட்சர்லாந்து-அயர்லாந்து (மாலை 5.30 மணி), ஆஸ்திரேலியா-ஜப்பான் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.






