என் மலர்
விளையாட்டு

சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ்: 17 நாடுகளை சேர்ந்த 80 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
- ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் தலா ரூ.15.41 லட்சம்.
- இரட்டையர் பிரிவில் வெற்றியாளர்கள் ரூ.4.98 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள்.
சென்னை:
உலக டேபிள் டென்னிஸ் அமைப்பு சார்பில் ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் கடந்த ஆண்டு சென்னையில் முதல் முறையாக நடைபெற்றது.
2-வது ஸ்டார் கன்டென்டர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. 15-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சித்தலே-மானுஷ் ஷா ஜோடிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 16 வீரர்களில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா மற்றும் சத்தியன் ஞானசேகரன் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் எந்த இந்திய வீரரும் போட்டித் தரவரிசையில் இடம்பெறாத நிலையில் தற்போது 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இது டேபிள் டென்னிசில் இந்தியாவின் முன்னேற்றத்தை காட்டுகிறது.
ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் தலா ரூ.15.41 லட்சம் பரிசுத்தொகையுடன் 600 உலகத் தரவரிசைப் புள்ளிகளையும் பெறுவார்கள். இரட்டையர் பிரிவில் வெற்றியாளர்கள் ரூ.4.98 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு 600 புள்ளிகளும் வழங்கப்படும்.






