என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி: 15-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடியது இந்தியா
- இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
- இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ராஜ்கிர்:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.
4-வது நாளான நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தென்கொரியா 5-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 15-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை ஊதிதள்ளியது. மலேசிய அணியில் 6 பேர் கோல் போட்டனர். இவர்களில் அகிமுல்லா அனார் 5 கோலும், அஷ்ரன் ஹம்சானி 4 கோலும், நோர்ஷியாபிக் சுமாந்திரி 3 கோலும் அடித்ததும் அடங்கும். மலேசியா அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்தது. சீன தைபேவுக்கு 3-வது தோல்வியாகும்.
லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் மலேசியா (9 புள்ளி) முதலிடமும், தென்கொரியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. வங்கதேசம் (3 புள்ளி), சீன தைபே (0) 3-வது மற்றும் கடைசி இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
'ஏ' பிரிவில் நடந்த இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, கஜகஸ்தானை சந்தித்தது. ஒரு தலைபட்சமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் கோல் மழையால் ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆனால் எதிரணியால் கடைசி வரை ஒரு பந்தை கூட வலைக்குள் திருப்ப முடியவில்லை.
முடிவில் இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் (4), சுக்ஜீத் சிங் (3), ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (தலா 2), அமித் ரோஹிதாஸ், ரஜிந்தர் சிங், சஞ்சய், தில்பிரீத் சிங் (தலா 1) கோல் போட்டனர். இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
முன்னதாக இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சீனா தனது தாக்குதல் ஆட்ட வேகத்தை அதிகரித்து சரிவில் இருந்து மீண்டு டிரா செய்தது.
சீனா, ஜப்பான் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசம் அடிப்படையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிய சீனா 2-வது இடத்தை வசப்படுத்தி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 3-வது இடம் பெற்ற ஜப்பான், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கஜகஸ்தான் (0) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தன.
இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். சூப்பர் 4 சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன மோதுகிறது.






