என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பஞ்சாப் அணியில் அவமதிக்கப்பட்டேன்: மனக்குமுறல்களை கொட்டிய கிறிஸ் கெய்ல்
- 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்தார்.
- கொரோனா காலத்தில் விளையாடியபோது, ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
டி20 யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டத்தால் உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து டி20 லீக்கிலும் விளையாடி முத்திரை பதித்தார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்காக அதிகப்படியான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆர்சிபி ஒரு கட்டத்தில் ஏலத்தில் எடுக்காத நிலையில், பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் செஞ்சூரி அடித்து அசத்தினார்.
2018ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 41 போட்டிகளில் விளையாடி 1339 ரன்கள் அடித்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரின்போது கொரோனா காலம் என்பதால், வீரர்கள் பயோ-பப்பிள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களை யாரும் அணுக முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது அணி தன்னை அவமரியாதையாக நடத்தியதாக உணர்ந்ததாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் கூறியதாவது:-
என்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் முன்னதாகவே முடிந்து விட்டது. பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன். ஐபிஎல் தொடருக்கு பெரிய பங்காற்றிய சீனியர் வீரர் என்ற மரியாதை அளிக்கப்படவில்லை. சிறுபிள்ளை போல என்னை நடத்தினார்கள். இதனால் ஒரு பெரிய கட்டிடம் என்னுடைய தோளில் இருப்பது போல் உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அழுத்தத்தை எதிர்கொண்டதாக உணர்ந்தேன்.
கொரோனா பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருக்கும்போது, பணத்தை விட உடல்நலம்தான் முக்கியம் என உணர்ந்தேன். இதனால் அனில் கும்ப்ளேயிடம் விவாதித்தேன். அணியை விட்டுச் செல்வதாக கும்ப்ளேவிடம் பேசியபோது மனமுடைந்து அழுதேன். பயிற்சியாளர் மற்றும் அணி ஆகியவை தன்னை நடத்திய விதத்தினால் ஏமாற்றம் அடைந்தேன்.
போகாதீர்கள் இருங்கள், அடுத்த போட்டியில் விளையாடுங்கள் என கே.எல். ராகுல் என்னை அழைத்துப் பேசினார். உங்களுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டேன்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.






