என் மலர்
கிரிக்கெட் (Cricket)

8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்
- இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
- எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (பிப்ரவரி 19-ம் தேதி) தொடங்கி மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை இந்த தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
மார்ச் 2-ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகிறது. முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ம் தேதி துபாயிலும், 2-வது அரையிறுதி போட்டி மார்ச் 5-ம் தேதி லாகூரிலும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கராச்சியில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்கப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் முதல் முறையாக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. 29 ஆண்டுகளுக்குப பிறகு பாகிஸ்தானில் தற்போது ஐ.சி.சி. போட்டி நடக்கிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி இங்கு நடை பெற்றது.
இதன் காரணமாக பாகிஸ்தான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளும்.
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






