search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரிஷப் பண்ட்- மயங்க் அகர்வால்
    X
    ரிஷப் பண்ட்- மயங்க் அகர்வால்

    ஐபிஎல் 2022: பிளேஆப் சுற்றுக்கு நுழைய ஒரு இடத்துக்கு 5 அணிகள் போட்டி

    பெங்களூர் அணி கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. நிகர ரன் ரேட்டில் மோசமாக இருப்பதால் அந்த அணி குஜராத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும்.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 63 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

    ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 2-வது இடத்திலும், லக்னோ 3-வது இடத்திலும் உள்ளன.

    ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் +0.304 ஆகவும், லக்னோ அணியின் ரன் ரேட் +0.262 ஆக இருக்கிறது. 14 புள்ளியுடன் இருக்கும் பெங்களூர் அணியின் ரன் ரேட் 0.323 ஆக இருக்கிறது.

    இதன் காரணமாக ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு கிட்டதட்ட தகுதி பெறுவது உறுதியாகி விட்டது.

    ராஜஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவையும் சந்திக்கின்றன.

    தற்போதுள்ள நிலையில் 5 அணிகளால் மட்டுமே 16 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற முடியும்.

    பிளேஆப் சுற்றின் ஒரு இடத்துக்கு 5 அணிகள் போட்டியில் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் காத்திருக்கின்றன.

    16 புள்ளிகள் வரை வந்தால் பெங்களூர், டெல்லி அல்லது பஞ்சாப் இடையே மட்டுமே போட்டி நிலவும். 14 புள்ளிகள் வரை அளவு வந்தால் மட்டுமே 5 அணிகள் இடையே போட்டி நிலவும்.

    பெங்களூர் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. நிகர ரன் ரேட்டில் மோசமாக இருப்பதால் அந்த அணி குஜராத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும். தோற்றால் பிளேஆப் சுற்றில் நுழைவது மிகவும் கடினமாகிவிடும். அடுத்த அணிகள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    12 புள்ளியுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் எஞ்சிய ஆட்டங்களில் பஞ்சாப் (இன்று), மும்பை (21ந் தேதி), அணிகளுடன் மோதுகின்றன.

    அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் இந்த 2 ஆட்டங்களிலும் வென்றால் தகுதி பெற்றுவிடும். இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    பஞ்சாப் அணியும் இதே நிலையில் இருக்கிறது. ஆனால் டெல்லியை விட நிகர ரன் ரேட்டில் குறைவாக உள்ளது. டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளேஆப் சுற்று வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோல்வி அடையும் அணிக்கு வாய்ப்பு குறையும்.

    கொல்கத்தா, ஐதராபாத் அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் வரை மட்டுமே பெற இயலும். பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெற இருந்தால் மட்டுமே இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு என்பது மிக கடினமாகும்.

    12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா கடைசி ஆட்டத்தில் லக்னோவை 18-ந் தேதி சந்திக்கிறது. 10 புள்ளியுடன் இருக்கும் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த அணி மும்பையை நாளையும், 22-ந் தேதி பஞ்சாப்பையும் எதிர் கொள்கிறது.
    Next Story
    ×