search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி கொண்டாட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்
    X
    வெற்றி கொண்டாட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்

    மான்செஸ்டர் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 
    3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
    பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
    அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

    219 ரன்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை விளாசி எடுத்தார்.

    3 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 129 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் ஆட்டம் டிராவில் முடியும் என அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி, தோல்வி என முடிவு தெரியும் போட்டியாக அது மாறியது.

    2-வது இன்னிங்சில் பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜான் 4 ரன்களிலும், பிராத்வேட் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சாள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். தோல்வியை தவிர்க்க போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் புரோக்ஸ் 62 ரன்களுடனும்,பிளாக்வுட் 55 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    இறுதியில் சற்று தாக்கு பிடித்த ஹோல்டர் 35 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

    இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் 3-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    Next Story
    ×