search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெறிக்க விட்ட ஸ்டோக்ஸ்- உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 311 ரன்கள் குவிப்பு
    X

    தெறிக்க விட்ட ஸ்டோக்ஸ்- உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 311 ரன்கள் குவிப்பு

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஸ்டோக்சின் அதிரடியால் 311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 

    தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர்தான் வீசுவார்கள் ஆனால், இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சை கேப்டன் டுபிளசிஸ் தேர்வு செய்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. தாகிர் இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்தார். துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இது இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் அடுத்து வந்த வீரர்கள் பதற்றமின்றி கவனமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜேசன் ராய்- ஜோ ரூட் ஜோடி வலுவான அடித்தளம் அமைக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜேசன் ராய் 54 ரன்களிலும், ஜோ ரூட் 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

    கேப்டன் இயன் மார்கன் தன் பங்கிற்கு, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். விறுவிறுப்பாக ஆடிய அவர் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பட்லர் (18), மொயின் அலி (3), வோக்ஸ் (13) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

    ஆனால் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை தெறிக்க விட்ட ஸ்டோக்ஸ், அரை சதம் கடந்தார். அணியின் ஸ்கோரும் 300ஐ தாண்டியது. ஆனால், 49வது ஓவரின் கடைசி பந்தில், அவர் நிகிடியிடம் விக்கெட்டை இழந்தார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஸ்டோக்ஸ், 79 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 89 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி ஒவரில் பிளங்கட் மற்றும் ஆச்சர் இருவரும் சேர்ந்து 11 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. 

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது. 
    Next Story
    ×