search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி
    X

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #SRHvKXIP

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஆட்டத்துடன் நாடு திரும்பும் டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ரன் கணக்கை தொடங்கினார். விருத்திமான் சஹாவும் பந்தை நாலாபுறமும் விரட்டியடித்தார்.

    பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணி நல்ல தொடக்கம் கண்டது. இந்த சீசனில் பவர்பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 78 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (28 ரன்கள், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) முருகன் அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை தாண்டியது. வேகமாக மட்டையை சுழற்றிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 160 ரன்னாக உயர்ந்த போது மனிஷ் பாண்டே (36 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் டேவிட் வார்னர் விக்கெட்டையும் ஆர்.அஸ்வின் கைப்பற்றினார்.




    டேவிட் வார்னர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து முஜீப் ரகுமானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் வார்னர் இந்த சீசனில் 12 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 8 அரை சதம் உள்பட 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (14 ரன்), முகமது நபி (20 ரன்), ரஷித் கான் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் 7 ரன்னுடனும், அபிஷேக் ஷர்மா 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


    12-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி இருக்கிறது.  #IPL2019 #SRHvKXIP
    Next Story
    ×