என் மலர்
செய்திகள்

ஆசிய தடகள போட்டிகள் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது
ஆசியாவை சேர்ந்த 44 நாடுகள் பங்குபெறும் ஆசிய தடகள போட்டிகள், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று தொடங்கின.
புவனேஸ்வர்:
இந்த ஆண்டு ஆசிய தடகள போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் போட்டிகளை தங்களால் நல்லபடியாக நடத்த முடியாதென ஜார்க்கண்ட் அரசு தெரிவித்தது. அதனால் இந்த வாய்ப்பு ஒடிசா மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 90 நாட்களில் உலக தரத்திலான மைதானம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் 22-வது ஆசிய தடகளப் போட்டிகள் இன்று (ஜூலை 6) தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற உள்ளன. தொடக்க விழாவில் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “90 நாட்களாக இந்த உலக தரத்திலான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மேம்படும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச தடகள போட்டிகள் சம்மேளன தலைவர் செபஸ்டின் கோ, குறைந்த நேரத்தில் சர்வதேச தரத்திலான மைதானத்தை தயார் செய்ததற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னர் மாநிலத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக நடைபெற்ற வீரர்கள் அணிவகுப்பில் 44 நாடுகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியை 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையான டின்டு லுகா வழி நடத்தினார்.
நான்கு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் 42 வகையான போட்டிகள் இடம்பெற உள்ளன. இதில் பெண்களுக்கு 21 போட்டிகளும் ஆண்களுக்கு 21 போட்டிகளும் அடங்கும். இது அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்துள்ளது.
Next Story






