search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒழுங்கீனமாக நடக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வருகிறது வேட்டு: அக்டோபர் 1-ல் விதிமுறை அறிமுகம்
    X

    ஒழுங்கீனமாக நடக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வருகிறது வேட்டு: அக்டோபர் 1-ல் விதிமுறை அறிமுகம்

    கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடக்கும் வீரர்களை கள நடுவரே வெளியேற்றும் அல்லது எதிரணிக்கு 5 ரன்கள் கொடுக்கும் வகையிலான புதிய விதிமுறை அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.
    கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகள் விளையாடும்போது பொதுவாக வீரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். முக்கியமான போட்டிகளில் அதிக அளவில் தங்களது எமோஷன்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தற்போது வீரர்கள் வார்த்தை போர்களில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள்.

    பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஸ்மித் டி.ஆர்.எஸ். ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த சக வீரர்களின் உதவியை கேட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் ஸ்மித் - விராட் கோலி நடவடிக்கையை பெரும்பாலான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போது கள நடுவர்கள் வீரர்களை தண்டிக்கும்படி வதிமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கால்பந்து போட்டியில் மஞ்சள் மற்றும் ரெட் கார்டு கொடுப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பிற்கு (MCC) பரிந்துரைகள் செய்யப்பட்டன.



    அந்த பரிந்துரைகளை ஆராய்ந்த எம்.சி.சி. தற்போது மைதானத்தில் உள்ள நடுவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவில் விதிமுறைகளை மாற்ற அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி ஒரு நடுவர் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஒரு வீரரை போட்டியில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது ஐந்து ரன்கள் எதிரணிக்கு வழங்க முடியும். இந்த முடிவை அணியின் கேப்டன் ஏற்க மறுத்துவிட்டால், எதிரணி வெற்றி பெற்றதாகக் கூட அறிவிக்க இயலும். அதேவேளையில் இரண்டு கேப்டன்களும் அந்த முடிவை எதிர்த்தால், போட்டியை கைவிடக்கூட நடுவர்களால் முடியும்.



    இந்த விதிமுறை அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது. எனவே, இனிமேல் வீரர்கள் மைதானத்திற்குள் மோதிக்கொண்டால் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
    Next Story
    ×