search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: ஐதராபாத் - பெங்களூர் முதல் ஆட்டத்தில் மோதல்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: ஐதராபாத் - பெங்களூர் முதல் ஆட்டத்தில் மோதல்

    10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.



    2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு போட்டி இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010-ம் ஆண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 புதுமுக அணிகள் பங்கேற்றன. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

    5-வது ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள் விளையாடின. விதிமுறை மீறி செயல்பட்டதால் கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    2013-ல் நடந்த 6-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. அந்த போட்டியோடு புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்டது.

    7-வது ஐ.பி.எல். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

    2015-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது முறையாக கோப்பையை வென்றது.

    கடந்த ஆண்டு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2016) நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது.



    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் இந்தப்போட்டி நடக்கிறது.

    8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டங்கள் இடம் பெறும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    எந்த ஐ.பி.எல் போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் காயம் அதிகரித்து உள்ளது. அஸ்வின், முரளி விஜய், ராகுல், டுமினி, குயின்டன் டிகாக், மிச்சேல் மார்ஷ், ஸ்டார்க் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முற்றிலும் விலகியுள்ளனர். விராட் கோலி, ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் ஆடமாட்டார்கள். உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்சும் காயத்தில் உள்ளார். அவர் எப்போது அணியோடு இணைவார் என்று தெரியவில்லை.

    உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால் எப்போதும் போல இந்த ஐ.பி.எல். போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும்.

    ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், வார்னர், சுமித், மார்கன், மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களுடன் விராட் கோலி, ரகானே, ரெய்னா, யுவராஜ் சிங், காம்பீர், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்களும் உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த புதுமுக வீரர்களான ஜெகதீசன் நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.

    சிறந்த அதிரடி வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாமல் போனது பரிதாபமே. அந்த அணி 3 தடவை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இதனால் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று ஆர்வத்தில் உள்ளது. அனைத்து ஐ.பி.எல்.லிலும் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. இதனால் இந்த தடவையாவது முன்னேற்றம் காண போராடும்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3-வது முறையாகவும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளும் முதல் முறையாக கோப்பைக்காக காத்திருக்கின்றன.

    ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×